கல்வி வளர்ச்சி தினம்

15.07.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் சார்பாக அருப்புக்கோட்டை வட்டாரம் P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதியம் 2.00 மணிக்கு கல்வி வளர்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அருப்புக்கோட்டை வட்டாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வானது தொடங்கியது. தலைமை ஆசிரியர் திருமதி.ஜெயராணி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாணவிகள் காமராஜரை பற்றிய கருத்துரைகளையும், காமராஜரின் பண்புகளை குறித்த பாடல்களுக்கு நடனம் ஆடி நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தனர். தலைமை உரையாற்றிய முதுகலை ஆசிரியர் திருமிகு.ராஜபாண்டி காமராஜரின் பண்புகள், செயல்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் கல்வி வளர்ச்சி நாளில் முன்னெடுக்கப்பட்ட கவிதை, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர். செயலர் தந்தை தனது தலைமையுரையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு கூறினார். கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், குழந்தைகள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் கூறினார். திருமிகு.பொருட்செல்வி தனது வாழ்த்துரையில் இன்றைய ஏற்பாடுகளை செய்து கொடுத்த தலைமை ஆசிரியருக்கு நன்றியும், போட்டிகள் பங்கேற்ற குழந்தைகளுக்கு வாழ்த்துக்களும் கூறினார். செல்வி தமிழ் வாசுகி நன்றியுரை வழங்கினார். செயலர் தந்தை கபிரியேல் மற்றும் உதவி செயலர் ஸ்டாலின் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசினை வழங்கினர்கள். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழாவானது இனிதே நிறைவுற்றது.

15.07.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் சார்பாக தேனி வட்டார அலுவலகத்தில் கல்வி வளர்ச்சி தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் புனித கேத்தரின் கணினி மையம் மாணவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழாவானது தொடங்கியது. கணினி ஆசிரியர் திருமிகு.பஞ்சவர்ணம் வரவேற்புரையாற்றினார். மாணவிகள் பாடல் பாடியும், நடனமாடியும் மகிழ்வித்தனர். தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.எலியாஸ் ராஜா தனது கருத்துரையில் காமராஜர் வரலாறு பற்றி சிறுகதையின் மூலம் எடுத்துரைத்தார். உதவி செயலர் அருட்பணி.ராஜன் தனது தலைமையுரையில் இன்றைய சூழலில் கல்வி வியாபாரமாக மாறிவிட்டது என்றும், குழந்தைகள் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து கற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆசிரியர் திருமிகு.சேவியர் சிறுகதை மூலம் “சமூக நீதியை காக்கும் கருவி கல்வியே” என்ற தலைப்பில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். கணினி ஆசிரியர் திருமிகு.ராபின்சன் நன்றியுரையோடு விழா நிறைவுற்றது.