பனக்குடி ஆர்.சி. பள்ளி வகுப்பறைகள் திறப்பு விழா

காரியாபட்டி பங்கின் கிளை மையமான பனக்குடி கிராமத்தில் உள்ள ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பு அறைகள் சங்கச் செயலர் அருள்பணி.கபிரியேல் அவர்களின் தனிப்பட்ட முயற்சியாலும், சங்கம் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பின் மூலம் கட்டித்தரப்பட்டது.

புதிய வகுப்பறைகள் திறப்பு விழாவானது 04.07.2023 அன்று காலை 10.00 மணிக்கு மேதகு பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சங்கத் தலைவர் மேதகு பேராயர் அந்தோணி பாப்புசாமி, சங்கச் செயலர் அருள்பணி.கபிரியேல், உதவிச் செயலர்கள் அருள்பணி.ராஜன், அருள்பணி.ஸ்டாலின், விருதுநகர் வட்டார அதிபர் அருள்பணி.அருள்ராயன், காரியாபட்டி பங்குத்தந்தை அருள்பணி. ஜோசப் அமலன், அமலவை சகோதரிகள், ஆர்.சி. பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், சங்க மைய அலுவலக மற்றும் அருப்புக்கோட்டை வட்டார பணியாளர்கள் பங்கேற்றார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு. இருதயராஜ் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். காரியாபட்டி பங்கு தந்தையும் பள்ளியின் தாளாளருமான அருள்பணி.ஜோசப் அமலன் வாழ்த்துரை வழங்கினார்.

சங்கச் செயலர் அருள்பணி.கபிரியேல் பள்ளி வகுப்பறைகள் கட்டித்தரப்பட்டத் திட்டம் எவ்வாறு இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை பற்றியும், இதுபோல் கண்டுகொள்ளப்படாத இடங்களில் சங்கம் தங்களால் இயன்ற உதவிகளை செயல்படுத்தி வருகிறது என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார். சங்கத் தலைவர் மேதகு பேராயர் அந்தோணி பாப்புசாமி புதிய வகுப்பறைகளை புனிதப்படுத்தி, வாழ்த்து கூறி ஆசி வழங்கினார். பள்ளி ஆசிரியர் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.