மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் சமூக நீதி நாள் விழா

22.09.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் கொடைக்கானல் வட்டார அலுவலகத்தில் சமூக நீதி நாள் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 68 நபர்கள் பங்கேற்றனர். இறைவணக்கப் பாடலுடன் விழாவானது தொடங்கியது. வருகை புரிந்த அனைவரையும் பணியாளர் திருமிகு.ஞான சசிகலா வரவேற்றார். கிரீன் அறக்கட்டளை திருமிகு.ராஜசேகர் சமூக நீதி நாள் குறித்தும், பெரியாரின் சிந்தனைகள், பெண்கள் இன்றைய சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் வாழவும், பெண் அடிமைத்தனத்திலிருந்து தன்னை மீட்டு எடுக்கவும், மனம் விரும்பிய செயலை தைரியமாக செய்யவும் ஆலோசனை கூறினார். கோல்பிங் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.எலியாஸ் ராஜா சாதியும் மதமும் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும், சாதிய பாகுபாட்டினால் சமுதாயத்தில் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். திருமிகு.தவமணி பெரியாரின் சிந்தனையாகிய சிந்தி, சந்தேகி, கேள்வி கேள் என்ற தலைப்பில் ஆலோசனைகள் கூறினார். சங்க உதவி செயலர் அருட்பணி.ராஜன் குழுக்களை வலுப்படுத்தவும் குழுக்களில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்கவும் கலந்துரையாடலோடு அதற்கான விளக்கம் அளித்தார். பசுமை கூட்டமைப்பு தலைவி திருமதி வேளாங்கண்ணி நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.