மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கம்
Caritas India – “Ezhuvom Iyakkam”

மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கம்

Caritas India – “Ezhuvom Iyakkam”

புற்றுநோய் பராமரிப்பு பிரச்சார மண்டல அளவிலான தன்னார்வலர்கள் கூட்டம்

இடம் : MMSSS மைய அலுவலகம், மதுரை
நாள் : 27.03.2023
நேரம் : காலை 11.00 மணி
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை : 120
நமது மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கம் செயல்படும் தேனி, பாளையம், கொடைக்கானல், வத்தலகுண்டு, மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டாரங்களில் இருந்து 95 பெண் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் துணைச் செயலர்கள் அருள்பணி ராஜன் மற்றும் அருள்பணி ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காரிதாஸ் இந்தியாவின் உதவி நிர்வாக இயக்குனர் அருட்தந்தை ஜோலி புத்தன்புரா மற்றும் தமிழ்நாடு மாநில அலுவலர் முனைவர் ஜான் ஆரோக்கியராஜ் அவர்களும் பங்கேற்றனர். அவர்களை அருட்தந்தை ராஜன் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

அருட்தந்தை ராஜன் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வின் பின்னணி மற்றும் அன்றைய நாளுக்கான செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

இறைவணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. திருமிகு.மோரிஸ், நிர்வாக அலுவலர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். திருமிகு.ஜஸ்டின் அவர்கள் மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கம் காரிதாஸ் இந்தியாவின் தோழமையில் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செய்த செயல்பாடுகள், சிறப்பு தினங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளைப் பற்றி விளக்கினார்.

அருட்தந்தை ஜோலி புத்தன்புரா அவர்களின் கருத்துக்கள்:

• “காரிதாஸ்” என்றால் அன்பு. அந்த அன்பை நாம் ஒவ்வொருவரும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
• கடவுள் தம் சாயலில் நம்மைப் படைத்து நம்மைக் கடவுளாக பார்த்தார். அதுபோல நீங்களும் எல்லாரையும் கடவுளாகப் பார்த்து, இன்முகத்துடன் இணைந்து வாழ வேண்டும். • சங்கமானது 55 ஆண்டுகளாக துயர் துடைப்புப் பணிகளைச் செய்து கொண்டு வருகின்றது.
• சமூகக் பணியைச் செய்யும்போது கடவுள் ஒருவருக்கொருவர் துணை செய்ய நம்மை படைத்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்படுகிறது.
• சமூகப் பணியைச் செய்யும் போது யாரையும் வேற்றுமை உணர்வோடு பார்க்கக் கூடாது. கடவுளுக்கு மதம் இல்லை அதுபோல நாமும் ஜாதி, இனம், மதம் ஆகியவற்றை கடந்து சமூகப் பணியைச் செய்ய வேண்டும்.
• காரிதாஸ் இந்தியா பல சமூக நிறுவனங்களோடு இணைந்து தோழமை உணர்வோடு; இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறது. அதுபோல இச்சங்கத்திலும் இணைந்து செயல்படுவதில் காரிதாஸ் இந்தியா பெரும் மகிழ்ச்சி கொள்கிறது.
• தமிழ்நாடு பல்வேறு வகையில் முன்னேறுவதற்கு காரிதாஸ் இந்தியா உதவி செய்துள்ளதுÉ ஏழ்மையில் உள்ளோரை முன்னேற்றியுள்ளது. முன்பு தமிழ்நாட்டு மக்கள் பிற மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்கச் சென்றனர். தற்போது பிற மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வருகின்றனர்.
• முன்பைவிட இப்போது சூழ்நிலைகள் அதிகம் மாறியுள்ளன. இருப்பினும் போதைப் பழக்கம், விவாகரத்து, சமூக வலைத்தள மோகம், கொலை, கொள்ளை என்று பலவிதமான தீமைகள் சமூகத்தைச் சீரழிக்கின்றன. இச்சூழலை மாற்ற நாம் ஒற்றுமையுடனும், மகிழ்வுடனும் வாழ முயற்சி செய்ய வேண்டும்.
• நாம் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க வேண்டும். அது அன்பு, நீதி, தோழமை நிறைந்ததாக இருக்க வேண்டும். அருகில் இருப்பவரோடு இணைந்து தோழமையுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நமது புன்னகை, நேரம், உழைப்பு ஆகியவற்றை நாம் பங்களிப்பு செய்ய வேண்டும்.
• இப்புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் காரிதாஸ் இந்தியா உங்களுக்குத் துணை நிற்கும். காரிதாஸ் இந்தியா என்கிற முகவரி மற்றம் பெற்று காரிதாஸ் ஜான்சி, காரிதாஸ் புனிதா என்ற ஒவ்வொரு தனிநபரின் முகவரியாக அது மாற வேண்டும்.

முனைவர் ஜான் ஆரோக்கியராஜ் மற்றும் பங்கு பெற்றவர்களின் கருத்துக்கள்:

முனைவர் ஜான் ஆரோக்கியராஜ் அவர்கள் இக்கூட்டம் பற்றி சுருக்கமான தகவல்கள் மற்றும் திட்டம் சார்ந்த தரவுகவைப் பகிர்ந்து கொண்டார். மேலும் பங்கேற்பாளர்களின் எதிர்பார்ப்புகள், ஆலோசனைகள், கடந்து வந்த பாதை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார்.

சமூகப் பணியில் புற்று நோயை குறித்த விழிப்புணர்வு வழங்குவதும், பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதும் மிக முக்கியமானது. புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி இருக்கும் இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய செய்தி இது என்பதை உணர்த்தினார். நமது வட்டாரப் பணியாளர்கள், தங்களின் அனுபவங்கள், நடத்திய விழிப்புணர்வுக் கூட்டங்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கு சேவை செய்தல் மற்றும் அதற்கான திட்டமிடல்கள், செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி பகிர்ந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கு பெற்றவர்களில் சிலர் புற்றுநோய் பாதிப்பு அனுபவம், மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், மற்றும் முயற்சிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். புற்றுநோயை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு, அவற்றில் தங்களுடைய பங்களிப்பு, தாங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள், இனிச் செய்ய வேண்டிய திட்டமிடல்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.

அருட்தந்தை ராஜன் அவர்கள் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூற, சிறிய மதிப்பாய்வுடன் கூட்டமானது இனிதே நிறைவடைந்தது. பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.