இயற்கை பாதுகாப்பு தினம்

18.07.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் கொடைக்கானல் வட்டார அலுவலகத்தில் இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் செயலர் தந்தை கபிரியேல், உதவி செயலர்கள் அருட்பணி ராஜன் மற்றும் அருட்பணி ஸ்டாலின், சோலைக்குருவி அறக்கட்டளை திருமிகு.ஜேசுவா, கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். திருமிகு.தவமணி அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் விழிப்புணர்வு பாடல் பாடினர். சோலைக்கருவி அறக்கட்டளை சேர்ந்த திருமிகு.ஜேசுவா தனது கருத்துரையில் இயற்கை பாதுகாப்பு குறித்தும், உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் தெளிவு படுத்தினார். செயலர் தந்தை தனது உரையில் இயற்கையை நேசிக்கும் மனநிலையை கொண்டவர்கள் எதிலும் உயர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், வீட்டில் பூச்செடிகள் மரக்கன்றுகள் வளர்க்கவும், நெகிழி பைகளை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை தூய்மையாக வைக்கவும் ஆலோசனை கூறினார். இயற்கை பாதுகாப்பில் இந்த பூமியில் நமது பங்கு என்ன என்பதை பங்கேற்ற அனைவரும் உறுதிமொழியாக எடுத்துக் கொண்டனர். பணியாளர் சசிகலா அனைவருக்கும் நன்றி கூறி கூட்டம் இனிதே நிறைவடைந்தது.