உலக சுற்றுச்சூழல் தினம்

27.06.2023 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கமும் சமயநல்லூர் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியின் பசுமை இயக்கமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தமர்வை நடத்தினர். ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் லாரன்ஸ் எட்வின் பாபு வரவேற்புரை வழங்கினார்கள். மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் துணைச்செயலர் அருள்தந்தை இராஜன் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அறிமுக உரை ஆற்றினார்கள்.

மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் கோல்பிங் திட்ட ஒருங்கிணைப்பாளர் எலியாஸ் ராஜா நம்மை வாழ்வித்துக் கொண்டிருக்கும் ஐம்பூதங்களும் எவ்வாறு கேடடைந்து கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார். நெகிழியினால் ஏற்படக்கூடிய தீமைகளையும் அதை ஒழித்தே ஆக வேண்டிய கட்டாயத்தையும் குறித்து எடுத்துரைத்தார். ஒரு நிமிடத்திற்கு 20 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் கடலை சென்றடையும் அவலத்தை சுட்டிக்காட்டினார். காலநிலை மாறுபாட்டால் பூமி எதிர்கொண்டு இருக்க கூடிய பேராபத்தை விளக்கினார். இயற்கை விவசாயத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் ரசாயன உரங்களால் விளையக்கூடிய தீமைகளையும் தக்க உதாரணங்களோடு எடுத்துரைத்தார். குறைந்தது பத்து மரங்களையேனும் நட்டு வளர்க்க வேண்டும் என்றும் நெகிழியை பயன்படுத்த மாட்டோம் நெகிழி உரைகளால் மூடப்பட்ட எந்த தின்பண்டங்களையும் வாங்க மாட்டோம் என்று மாணவ மாணவியர்கள் முடிவெடுத்து அதைப் பின்பற்றுவதன் மூலம் ஓரளவு மாற்றத்தை உருவாக்க முடியும் என்றார்.

தலைமை உரையாற்றிய பள்ளி தாளாளர் அருள்தந்தை பால் பிரிட்டோ பள்ளி மாணவர்களில் இருந்து தொடங்குகிற மாற்றமே உண்மையில் சமூக மாற்றத்தை உருவாக்கும் என்பதை உலக அளவில் மாணவர்களால் நிகழ்ந்த சமூக மாற்றங்களை கோடிட்டு காட்டி பேசினார். மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவர்கள் மிகுந்த அக்கறையோடும் கவனத்தோடும் செயல்பட்டால் தான் இப்பூமியை பாதுகாக்க முடியும் என்றார். சுற்றுச்சூழலின் அனைத்துக் கூறுகளையும் பாதுகாப்பதற்கான அற்புதமான உறுதி மொழியை மாணவ மாணவியர்கள் இணைந்து எடுத்துக் கொண்டனர். பசுமை இயக்கத்தின் பொறுப்பாசிரியை லூர்து சகாய சுபிதா நன்றியுரை வழங்கினார்கள்.

அதன் பின்னர் மரம் நடுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளித் தாளாளர் அருள்தந்தை பால் பிரிட்டோ, மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் துணைச்செயலர் தந்தை இராஜன் மற்றும் கோல்பிங் திட்ட ஒருங்கிணைப்பாளர் எலியாஸ் ராஜா ஆகியோர் மரங்களை நட்டனர்.