International Domestic Workers Day

அகில உலக வீட்டுப்பணிப்பெண்கள் நாள், ஜூன்-15, 2022

நாள் : 15.06.2022

கிழமை: புதன்கிழமை

இடம் : டைமண்ட் அரங்கம், MMSSS, மதுரை-16

நேரம்: காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை

தலைமை: அருட்தந்தை. கபிரியேல்  – செயலர்

திருமிகு. மரிய வில்லியம், திருமதி. சூர்யா.

முன்னுரை

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. செயலர். தந்தை. கபிரியேல் மற்றும் திரு. மரிய வில்லியம்  அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் 14 – பணியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் 4 நபர்கள் நமது சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள். 10 நபர்கள் (3 – நிலக்கோட்டை, 1- ஆனையூர், 2- பழைய விளாங்குடி, 3 – செல்லூர், 1 – தத்தனேரி) புதிய உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வரவேற்புரை

    வீட்டுப்பணிப்பெண்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர், திருமதி. சூர்யா விழாவிற்கு வருகை தந்த அனைத்து வீட்டுப்பணிப்பெண்களையும், தலைமை ஏற்க வந்த சான்றோரையும் இன்சொல்கூறி வரவேற்றார்.


சுயஅறிமுகம்

    வரவேற்பினைத் தொடர்ந்து சுய அறிமுகம் தொடங்கியது. விழாவிற்கு வருகைபுரிந்த அனைத்துப்பணிப்பெண்களும் இன்முகத்துடன் இயல்பாகத் தங்களை சுய அறிமுகம் செய்துகொண்டனர். மேலும் அவர்களது தனித்திறன்களுடன் அறிமுகம் செய்துகொண்டது மிகச்சிறப்பாக அமைந்தது.


பணியாளர்களின் அனுபவப்பகிர்வு

    பணியாளர்கள் தங்கள் பணியிடங்களில் ஏற்படும் சவால்கள், அனுபவங்கள் குறித்து உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டனர். அதில் 25 ஆண்டுகளாக வீட்டுப்பணிபெண்ணாக வேலை செய்வதாக திருமிகு. பாண்டியம்மாவும், 6 ஆண்டுகளாக ஒரு சிறப்புக்குழந்தையைக் கவனித்து வருவதாக திருமிகு. அங்கயற்கண்ணியும், கொரோனா காலத்திற்கு முன்பு வீட்டில் தங்கிப்பணிபுரிய பாண்டிச்சேரியில் ஒரு வீட்டிற்குச் சென்று, பல்வேறு இன்னல்கள், தடைகளைத் தாண்டி தனது சொந்த ஊருக்குத் திரும்பிய அனுபவத்தை திருமிகு. ஜெயலெட்சுமியும் பகிர்ந்துகொண்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.


திருமிகு. மரியவில்லியம் அவர்களின் ஊக்கமூட்டும் உரை

    பணியாளர்களின் அனுபவப்பகிர்வினைத் தொடர்ந்து, திருமிகு. மரியவில்லியம் அவர்கள் உரையாடத்துவங்கினார். ஒரு பணியளிப்போராக ஆரம்பகாலத்தில் அவர் செய்த ஒரு சில தவறுகள், அவர் வீட்டில் பணிபுரியும் 'சாந்தி” அம்மாவை மிகவும் காயப்படுத்தியது  என்பதை உணர்ந்து, அதனை உடனே சரிசெய்து கொண்டதால் அந்த அம்மா 25 ஆண்டுகளாக அவர் வீட்டில் பணிபுரிகிறார் என்றும், 'அவர் இல்லையென்றால் ஒரு அணுவும் வீட்டில் அசையாது” என்று கூறி, அவர் அனைத்து வீட்டுப்பணிப்பெண்களின் சேவையையும் ஒரே வரியில் பாராட்டினார். மேலும் வீட்டுப்பணிப்பெண்களின் நிறை மற்றும் குறைகளை மிகவும் அழகாக ஒருசில கருத்துக்கதைகள் மூலம் எடுத்துரைத்து, முதலில் வீட்டுப்பணிப்பெண்கள் தங்களது ‘தாழ்வு மனப்பான்மையை” உடைத்தெறிந்து தைரியமாக தங்களது அடையாளத்துடன்  வெளிவரவேண்டும் என்று உற்சாகமாகத் தனது உரையை நிறைவு செய்தார்.


வீட்டுப்பணிப்பெண்கள் சேவைமையத்தின் தேவையும், சவால்களும்

    வீட்டுப்பணிப்பெண்கள் சேவை மையத்தைப் பற்றிய அறிமுகம், அதன் சிறப்பம்சங்கள், இம்மையத்தின் மூலம் பணிசெய்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக மைய ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தார். மேலும் தனியார் நிறுவனம் (அ) தெரிந்த நபர் மூலமாக பணி செய்யும்போது அதிலுள்ள சவால்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. சங்கத்தின் நோக்கம் குறித்தும், கூடுதலாக வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ள இலவச ஆற்றுப்படுத்துதல் சேவை பற்றியும் கூறப்பட்டது.


வாழ்த்துரை

    அதனைத் தொடர்ந்து செயலர் தந்தை அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வீட்டுப்பணிப்பெண்களின்  சர்வதேசநிலை குறித்தும், அதற்கான அங்கீகாரம் குறித்தும் அவர் எடுத்துக் கூறினார். வீட்டுப்பணிப்பெண்களின் துயரங்களைப்போக்கத்  தேவைப்டும் ஒரு மையமாக நமது சங்கத்தின் வீட்டுப்பணிப்பெண் மையம் திகழ்வதாகவும், வீட்டுப்பணிப்பெண்களின் அடையாளத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த அமைப்பாக இம்மையம் வளர்ச்சிபெறவும் வாழ்த்துக்கள் கூறினார்;.


பரிசு வழங்குதல்

    விழாவில் கலந்துகொண்ட 14 வீட்டுப்பணிப்பெண்களில் 25 ஆண்டுகளாக மீனாட்சிபுரத்தில் பணிபுரியும் திருமதி. பாண்டியம்மாள் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அவருக்கு ஒரு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.


நன்றியுரை

    அகில உலக வீட்டுப்பணிப்பெண்கள் தினவிழாவில் கலந்துகொண்ட பணியாளர்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்தனர். விழாவானது மிகவும் பயனுள்ளதாக இருந்ததென்று கூறினர். இதுபோல மையம் இருப்பது தெரியாததால் தனியார் நிறுவனம் மூலம் பணிபுரிந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியதையும் இனிவரும் காலங்களில் தொடர்ந்து சங்கத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்றும், மேலும் தங்களுக்குத் தெரிந்த வீட்டுப்பணிப்பெண்களையும் சங்கத்தில் இணைப்போம் என்றும் உற்சாகத்துடன் கூறினர்.


எதிர்பார்ப்பு

    பெரும்பாலான பணியாளர்கள் பகுதிநேர அல்லது முழுநேரப்பணி வேண்டி காத்திருப்பதாகவும், அதற்கான வாய்ப்பினை விரைவில் வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களில் 4 பேர் புதிய உறுப்பினராக, பணியாளர் விண்ணப்பத்தினைப் பதிவு செய்தனர்.


மதிய உணவு